

பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கைலாஷ் சத்யார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள நமது மகள்களுக்கு எதிராக இப்போது நடைபெறும் நிகழ்வுகள் தேசிய அவமானம் ஆகும். பிரதமருக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், நமது பெண்கள் மற்றும் குழந்தைகளின் நீதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இந்த நாடு உங்களிடம் எதிர்பார்க்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போருக்கு தாங்கள் தலைமை தாங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நமது மகள்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம்.
நம்மிடம் மனிதாபிமானம் மற்றும் கருணை மனப்பான்மை குறைந்து வருகிறது. நமது மகள்களை பாதுகாக்கத் தவறிவிட்டோம். இதற்கு நமது மகன்களை பொறுப்பாக்குகிறோம். பாலியல் வன்முறை மனப்பான்மைக்கு முடிவுகட்ட, மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.