

எங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என உ.பி.யில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலேயே நள்ளிரவில் போலீஸார் தகனம் செய்ததாக தெரிகிறது.
நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, எஸ்ஐடி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக புல்கண்டி கிராமத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு எந்த பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று சில தனியார் தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களுக்கு மட்டும் கிராமத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் மகளின் உடலை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என போலீஸாரிடம் கோரினோம். ஆனால் அதனை ஏற்காமல், அவசர அவசரமாக அவளது சடலத்தை போலீஸார் தகனம் செய்துவிட்டனர். அது மட்டுமின்றி, பிரேதப் பரிசோதனை அறிக்கையை கூட எங்களிடம் காட்டவில்லை.
எங்கள் வீட்டில் எந்நேரமும் போலீஸார் இருக்கிறார்கள். வெளியே செல்வதற்கு கூட அனுமதி மறுக்கின்றனர். மேலும், இந்த வழக்கை முடித்துக் கொள்ளுமாறு கிராம நிர்வாகமும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. எங்கள் மகளின்மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.