

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச (அன்னம்) வாகனத்திலும் உற்சவரான மலையப்ப சுவாமி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, புதன்கிழமை மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை, வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை திருமாட வீதிகளில் பவனி வந்த உற்சவரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்திப் பரவசத்துடன் கோஷம் எழுப்பி ஏழுமலையானை வணங்கி வழிபட்டனர். வாகன ஊர்வலத்தில் காளை, குதிரை, யானை பரிவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவில் ஹம்ச (அன்னம்) வாகனத்தில் உற்சவ மூர்த்தி மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.