

ஹாத்தரஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.
இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹாத்தரஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்றனர்.
ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீஸார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார்.
அதன்பின் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீஸார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர். பிரியங்கா காந்தி காரை ஓட்ட, அருகே ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மற்றொரு சிறிய பேருந்தில் சமூக விலகலைக் கடைப்பிடித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சென்றனர்.
டெல்லி-நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே உ.பி. உள்துறை அமைச்சகம் சார்பில் விடுத்த அறிவிப்பில் 5 பேர் மட்டும் ஹாத்தரஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, இந்தத் கவலை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு காரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸார் 5 பேர் ஹாத்தரஸ் நகருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.