Published : 03 Oct 2020 08:17 PM
Last Updated : 03 Oct 2020 08:17 PM

ரூ.50-க்கு வாங்கப்படும் ஆப்பிள் ரூ.150-க்கு விற்கப்படும் நிலை மாறும்: பிரதமர் மோடி உறுதி

சிம்லாவில் விவசாயிகளிடம் இருந்து ரூ.50-க்கு வாங்கப்படும் ஆப்பிள் நாட்டின் மற்ற பகுதிகளில் ரூ.150-க்கு விற்கப்படும் நிலை மாறும், இனி லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சோலங்கில் அபிநந்தன் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். முன்னதாக உலகத்தின் நீளமான அடல் சுரங்க பாதையை ரோதங்கில் திறந்து வைத்த பிரதமர், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிசுவில் அபார் சமாரோஹ் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சுரங்கத்தின் மாற்றியமைக்கும் தாக்கம்

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மணாலியின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவும், அந்தப் பகுதியின் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் ஆசையின் காரணமாகவும் இந்த சுரங்க பாதையை கட்டமைக்க முடிவெடுத்ததாக கூறினார்.

இமாச்சல், லே, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் வாழ்வை அடல் சுரங்கம் மாற்றியமைக்கும் என்று பிரதமர் கூறினார். பொது மக்களின் சுமையை குறைத்துள்ள இந்த சுரங்கம், லாஹவுல் மற்றும் ஸ்பிதியை வருடம் முழுவதும் சென்றடைவதற்கான வசதியை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிராந்திய பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் இந்த சுரங்கம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

குலுமணாலியில் சித்து கீயை உண்ணும் சுற்றுலா பயணிகள், லாஹவுலில் தோ மார் மற்றும் சிலாதேவை மதிய உணவாக உண்ணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் கூறினார்.

ஹமீர்பூரில் தவுலாசித் ஹைட்ரோ திட்டம்

ஹமீர்பூரில் 66 மெகாவாட் தவுலாசித் ஹைட்ரோ திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இத்திட்டம் மின்சாரத்தை வழங்குவதோடு அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் என்று அவர் கூறினார்.

ஊரக சாலைகள், நெடுஞ்சாலைகள், மின்சார திட்டங்கள், ரயில் மற்றும் விமான இணைப்பு உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தும் அரசின் திட்டத்தில் இமாச்சல் பிரதேசமும் ஒரு முக்கிய பங்குதாரர் என்று பிரதமர் கூறினார்.

இமாச்சல் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி

கிராத்பூர்-குள்ளு-மணாலி சாலை, சிராக்பூர்- சோலன்-கைத்லிகாட் சாலை, நங்கல் அணை-தல்வாரா ரயில் பாதை, பானுபளி-பிலாஸ்பூர் ரயில் பாதை ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், இமாச்சல் பிரதேச மக்களுக்கு சேவை அளிப்பதற்காக இவற்றை விரைவில் முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சாலை, ரயில் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை போலவே, மக்களின் வாழ்க்கையை வசதியாக்குவதற்கு கைபேசி மற்றும் இணைய இணைப்பும் தேவை என்று அவர் கூறினார்.

ஆறு லட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை மூலம் இணைய வசதியை அளிக்கும் அரசின் திட்டத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த வருடம் ஆகஸ்ட் 15-இல் இருந்து ஆயிரம் நாட்களுக்குள் இந்த திட்டம் முடிவடையும் என்றார்.

கிராமங்களில் வை ஃபை இணைப்புகள் இந்த வசதியின் மூலம் வழங்கப்படும் என்றும் வீடுகளுக்கும் இதன் மூலம் இணையம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கல்வி, மருந்துகள், நோயாளிகளின் சுற்றுலா என்று இதன் மூலம் இமாச்சல் பிரதேசத்தின் குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வை எளிதாக்குவதும், அவர்களுக்கு அவர்களது அனைத்து உரிமைகளின் முழு பலன்களும் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் தொடர் முயற்சியாக இருப்பதாக பிரதமர் கூறினார். ஊதியம், ஓய்வூதியம், வங்கி சேவைகள், மின்சார கட்டணம் போன்ற கிட்டதட்ட அனைத்து அரச சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சீர்திருத்தங்கள் நேரம், பணம் போன்றவற்றை மிச்சப்படுத்தி ஊழலுக்கான சாத்தியங்களை குறைப்பதாக அவர் கூறினார்.

கரோனா காலத்திலும், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 5 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் 6 லட்சம் பயனாளிகளின் ஜன் தன் கணக்குகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

வேளாண் சீர்திருத்தங்கள்

வேளாண் சீர்திருத்தங்களை எதிர்ப்போரை விமர்சித்த பிரதமர், தங்களது சொந்த லாபங்களுக்காக மட்டுமே எப்போதும் பணிபுரிவோரை இந்த சீர்திருத்தங்கள் கவலையடைய செய்துள்ளதாக தெரிவித்தார். இவர்கள் உருவாக்கியுள்ள இடைத்தரகர்கள் அமைப்பை இது பாதிப்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.

குல்லு, சிம்லா போன்ற பகுதிகளில் ஒரு கிலோ ரூபாய் 40 மற்றும் 50 க்கு வாங்கப்படும் ஆப்பிள்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஒரு கிலோவிற்கு ரூபாய் 100 முதல் 150 வரை விற்கப்படுவதாக அவர் கூறினார். இதன் விவசாயிகளுக்கும், வாங்குபவர்களுக்கும் பலனில்லை என்றார் அவர். அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் சீசன் உச்சத்தை அடைந்து வருவதால் அவற்றின் விலைகள் குறைந்து சிறு தோட்டங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

வேளாண்துறையின் மேம்பாட்டுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சிறு விவசாயிகள் விரும்பினால் அவர்கள் சங்கங்களை அமைத்து ஆப்பிள்களை நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம் விற்கலாம் என்று அவர் கூறினார்.

பிரதமர் விவசாயிகள் சம்மான் நிதி

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டிலுள்ள 10.25 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் விவசாயிகள் சம்மான் நிதியாக ரூபாய் ஒரு லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள 9 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

சமீப காலம் வரை பல துறைகளில் பணிபுரிய பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் சமீபத்தில் செய்யப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இதை மாற்றியமைத்து உள்ளதாகவும் பிரதமர் கூறினார். தற்போது ஆண்களுக்கு இணையான உரிமைகளும் ஊதியமும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கும், தற்சார்பு இந்தியாவில் உருவாக்குவதற்கும் சீர்திருத்தங்கள் தொடரும் என்று பிரதமர் கூறினார்.

இமாச்சல் பிரதேசம் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களின் கனவுகளும் ஆசைகளும் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x