

ஹாத்தரஸில் கூட்டு பலாத்காரத்தால் பலியான பெண்ணின் வீட்டிற்கு செல்ல பத்திரிகையாளருக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை சந்தித்த குடும்பத்தினர் உ.பி. அரசு மீது சராமரி புகார் கூறியுள்ளனர்.
உத்திரப்பிரதேசம் ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்தின் தலீத் பெண் கடந்த மாதம் 14 இல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தாக்குதலுக்கும் உள்ளனவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 28 ஆம் தேதி அவர் பலியானார்.
இதை தொடர்ந்து இப்பிரச்சனையை உ.பி. அரசிற்கு எதிராக எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றனர். இதனால், ஹாத்தரஸில் குவிந்த பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.
இதன் மீதானப் புகார்கள் தொடர்ந்து கிளம்பியதால் சற்றுமுன் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அக்குடும்பத்தினரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தார் உ.பி அரசு மீது சராமரியானப் புகார்களை அடுக்குகின்றனர்.
இது குறித்து பலியான பெண்ணின் அண்ணி கூறும்போது, ‘எங்கள் வீட்டு பெண் கரோனாவில் இறந்ததாகக் கருதுங்கள் எனவும், ரூ.25 லட்சம் அரசு இழப்பீடு வங்கி கணக்கில் கிடைத்ததால் வாயை மூடும்படியும் எஸ்.பி எங்களை மிரட்டினார்.
கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட உடலை பார்க்க விடாமல் தடுத்த மாவட்ட ஆட்சியர், உடற்கூறு பரிசோதனையால் உடல் சிதைக்கப்பட்டு விடும் எனவும், அதை பார்த்தால் 10 நாட்களுக்கு உறக்கம் வராது என்றும் மிரட்டினார்.’ எனத் தெரிவித்தார்.
இவற்றை ஹாத்தரஸ் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்பியான விக்ராந்த் வீர் மறுத்துள்ளனர். இதனால், அவர்களை உண்மை அறியும் சோதனை செய்யவும் அக்குடும்பத்தார் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே, இவ்வழக்கை உ.பி.யின் சிறப்பு படை அக்குடும்பத்தாரிடம் விசாரணை செய்வதால் இரண்டு தினங்களாக பத்திரிகையாளர் சந்திக்க மறுக்கப்பட்டது. ஆனால், இதுபோல் எவரும் தங்களை இதுவரை விசாரிக்க வரவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
இது குறித்து பலியான பெண்ணின் தாயார் மேலும் கூறும்போது, ‘போலீஸார் எரித்த உடல் யாருடையது என எங்களுக்கு தெரியாது. எனவே, அவர்கள் அளித்த அஸ்தியை நாம் வாங்க மறுத்து விட்டோம்.
எங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை தேவை. அவர்களிடம் மட்டுமே நாம் விசாரணைக்கு ஒத்துழைப்போம்.’ எனத் தெரிவித்தார்.
பலியான பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என ஹாத்தரஸ் எஸ்.பி கூறி இருந்தார். இதன் மீதான கேள்விக்கு தம் பெண்ணை தான் பார்க்கும் போது உடலில் துணியில்லாமல் கிடந்ததாக அவரது தாய் பதிலளித்துள்ளார்.
இவ்வழக்கில் பலியான பெண்ணின் குடும்பத்தாருக்கு உண்மை அறியும் பரிசோதனை செய்ய ஹாத்தரஸ் போலீஸார் கோரியுள்ளனர். இதை தாம் செய்ய முடியாது எனவும் அவர்கள் மறுத்து விட்டனர்.
பத்திரிகையாளர் அனுமதிக்கு சற்று முன்பாக லக்னோவிலிருந்து வந்த உ.பி. காவல்துறையின் டிஜிபி ஹிதேஷ் சந்திர அவஸ்தி மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான அவினேஷ் அவஸ்தி ஆகியோர் சந்தித்து பேசினர்.
இதன் மீதான அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அளிப்பதாகவும் அவர்கள் கூறிச் சென்றனர். இதன் பிறகே பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு அனுமதிக்கப்பட்டது