

லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு ரூ.660 கோடி மதிப்பிலான உதிரி பாகங்களை வழங்க அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் லாக்கிட் மார்ட்டின் நிறுவனம் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை தயாரித்து வருகிறது. இவற்றை சரக்கு விமானங்களாகவும் போர் விமானங்களாகவும் பயன்படுத்த முடியும். கடந்த 2008-ம் ஆண்டில் லாக்கிட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து ரூ.6,000 கோடி விலையில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களை இந்தியா வாங்கியது. இவை இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. தற்போது 5 விமானங் கள் மட்டுமே உள்ளன. இந்த ரகத்தைச் சேர்ந்த மேலும் 6 விமானங்களை வாங்க அமெரிக்கா வுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த பின்னணியில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு தேவையான ரேடார், ஜிபிஎஸ் கருவிகள், இரவில் பார்க்க உதவும் கண்ணாடி உள்ளிட்ட உதிரி பாகங் களை வழங்குமாறு லாக்கிட் மார்ட்டின் நிறுவனத்திடம் கோரப்பட்டது. இவற்றை வழங்க அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கு ரூ.660 கோடி மதிப்பிலான உதிரி பாகங்களை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்திய பெருங்கடல் பசிபிக், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 17 நாடுகளுக்கு மட்டுமே சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த விமானங்களில் 20 டன் எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல முடியும். அதாவது ராணுவ டாங்கிகள், ஏவுகணை கள், கனரக வாகனங்கள், படகுகளை கொண்டு செல்ல முடியும். போர் முனைக்கு வீரர்களையும் அழைத்துச் செல்ல முடியும். ஓடுபாதையில் மிக குறுகிய தொலைவிலேயே மேலெழும்பும் திறன் படைத்தது.
லடாக்கில் இந்திய - சீன எல்லைக் கோட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள டவ்லத் பெக் ஓல்டியில் சிறிய அளவிலான விமானப் படைத்தளம் அமைந் துள்ளது. இந்த தளத்தில் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் அண்மையில் தரையிறக்கப்பட்டது.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் நிலையில், இந்த உதிரி பாக விற்பனைக்கு பென்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் எல்லையில் போர் மூண்டால், இந்த விமானங்கள் முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.