

தாக்குதல்களில் காயம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ராஜகாட்டுக்கு 1000 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். அவர்களை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வரவேற்றார்.
பணியின் போது படுகாயம் அடைந்த உடல் உறுப்புகளை இழந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், குஜராத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு, கடந்த 16 நாட்களாக 1000 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.
அவர்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, அவர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில், காந்திஜியின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சிஆர்பிஎப் வீரர்கள் நாடு முழுவதும், திறம்பட பணியாற்றுவதாகவும், நாட்டுக்காக பல உயர்ந்த தியாகங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பல வீரர்கள் பணியின்போது படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சைக்கிள் பயணம் மேற்கொண்ட குழுவினரின் தைரியத்தையும், மன உறுதியையையும் பாராட்டிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உடல் தகுதி இந்தியா இயக்கத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரமாக பங்கெடுத்துள்ளதையும் குறிப்பிட்டார்.
கடந்த 2012ம் ஆண்டு மாவோயிஸ்ட் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காலை இழந்து சவுரிய சக்ரா விருது பெற்ற அதிகாரி ஆர்.கே.சிங்கும் இந்த சைக்கிள் பேரணி குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சைக்கிள் பேரணி குழுவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 6 பெண் காவலர்களும் இடம் பெற்றிருந்தனர்.