Published : 02 Oct 2020 05:41 PM
Last Updated : 02 Oct 2020 05:41 PM

கரோனா வந்தால் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன் என பேசிய பாஜக தேசியச் செயலாளருக்கு கரோனா தொற்று உறுதி

கரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன், அப்போதுதான் கரோனாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனைகள் அவரால் புரிந்துகொள்ள முடியும் என்று பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக சமீபத்தில் அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய தொண்டர்கள் கரோனாவை விட மிகப்பெரிய எதிரியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அவர்கள் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.

நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால், நேராக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக் கொள்வேன்.

கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை மம்தா மோசமாக நடத்துகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மகன், மகள் பார்க்கக் கூட அனுமதியில்லை. நாய், பூனையைக் கூட இவ்வாறு நாம் நடத்தியதில்லை” எனத் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசிய அனுபம் ஹஸ்ரா குறித்து சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அனுபம் ஹஸ்ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x