Last Updated : 02 Oct, 2020 10:38 AM

 

Published : 02 Oct 2020 10:38 AM
Last Updated : 02 Oct 2020 10:38 AM

அதிகரிக்கும் கரோனா வைரஸ்: 144 தடை உத்தரவை பிறப்பித்தது கேரள அரசு 

கேரள முதல்வர் பினராயி விஜயன்: படம் ஏஎன்ஐ

திருவனந்தபுரம்


கேரளாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைத் தடுக்கும் பொருட்டு மாநிலத்தில் 5 பேருக்குமேல் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

கேரள தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா நேற்று நள்ளிரவு பிறப்பித்த இந்த உத்தரவில், 5 பேருக்கு மேல் மாநிலத்தில் எந்த இடத்திலும் யாரும் கூடக்கூடாது. இதற்கான 144 தடை உத்தரவு அக்டோபர் 3-ம் தேதி காலை மணியிலிருந்து அக்டோபர் 31-ம் தேதிவரைஅமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 8,135 பேர் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது, 72,339 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, நேற்று நள்ளிரவு மாநில தலைமைச் செயலாளர் மாநிலம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

இதுதொடர்பாக மாநிலத் தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகமாகக் கூடுவது, கூட்டமாகச் சேர்வது போன்றவை இன்னும் பரவலை வேகப்படுத்தும். ஆதலால், 5 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 3-ம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சூழலை ஆய்வு செய்து, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திருமணங்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கேரளாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி 1.50 லட்சத்தையும், நேற்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 72,339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதில் 30,258 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணியாவிட்டால், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் இருந்தால் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x