Last Updated : 02 Oct, 2020 09:26 AM

 

Published : 02 Oct 2020 09:26 AM
Last Updated : 02 Oct 2020 09:26 AM

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: தாமாக முன்வந்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கு: உ.பி. தலைமைச்செயலாளர், டிஜிபி நேரில்ஆஜராக சம்மன்


உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையையும், நீதி கேட்டு போராட்டங்களையும் உருவாக்கியுள்ள நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர், மாநில காவல் டிஜிபி, கூடுதல் டிஜிபி ஆகியோர் வரும் 12-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தி்ல் அனைத்து விவரங்களுடன், ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலைத் தகனம் செய்ய போலீஸார் நிர்பந்தத்தினர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நாளேடுகளிலும், காட்சி ஊடகங்களிலும் இந்த செய்தி பெரும் பரபரப்பாகியது. ஹத்ராஸ் சம்பவத்தி்ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து நேற்று ஆறுதல் தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்ப்ரீத் சிங் ஆகியோர் தாமாக முன்வந்து, ஹத்ராஸ் சம்பவத்தை வழக்காக பதிவு செய்தனர். மாநில தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், கூடுதல் ஏடிஜிபி ஆகியோர் வரும் 12-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஹத்ராஸ் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

அதுமட்டுமல்லாமல், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரும் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அறிக்கைகளையும் கொண்டுவந்து வழக்கு தொடர்பாக நேரில் விளக்கமும், எடுக்கப்பட்ட நடவடிக்கை விளக்க வேண்டும்.

ஹத்ராஸ் சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட பெண்ணின் உடல் அவர்களின் பெற்றோரின் விருப்பமின்றி போலீஸார் தகனம் செய்தது நீதிமன்றத்தை வெகுவாக வேதனைப்படுத்தியுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது. அதனால் இந்தவழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளோம் என்று சம்மனில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அந்த குடும்பத்தினர் நீதிமன்றத்துக்கு வந்து செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதா என்பதையும், இந்த உரிமைகளை மீறுவதற்காக மாநில அதிகாரிகள் அடக்குமுறையாகவும், உயர் தலைவர்களாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டார்களா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட உரிமைகள், மாநிலத்தில் குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண், குடும்பத்தார் ஆகியோரின் உரிமைகள் மிகவும் முக்கியமானது.

மேலும், இறந்தவரின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தை மாநில அதிகாரிகள் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை ஒடுக்குவதற்கும் பறிப்பதற்கும் நாங்கள் ஆராய விரும்புகிறோம்.

அதுமட்டுமல்லாமல் மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை எவ்வாறு செல்கிறது என்பதையும், விசாரணை திருப்திகரமாகச் செல்லாவிட்டால், தனிப்பட்ட விசாரணை முகமைக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

இந்த வழக்கிற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் ஜேஎன் மாத்தூர், அபினவ் பட்டாச்சார்யா இருவரையும் நியமித்துள்ளோம்

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் சம்மனில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x