

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையடுத்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் லாலு பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுவதால், விஜய் காட் பகுதியில் உள்ள அவரின் நினைவிடத்துக்கும் சென்ற பிரதமர் மோடி மலர்கள் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி பிறந்ததினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் நம்முடைய அன்பான பாபுவை வணங்குவோம். காந்தியின் வாழ்க்கையிலும், அவரின் புனிதமான சிந்தனையிலும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது.
வளமான, கருணையுள்ள இந்தியாவை உருவாக்குவதில் மகாத்மா காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன” எனத் தெரிவித்தார். மேலும், மகாத்மா காந்தி தொடர்பாக சிறிய வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டரில் இணைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள விஜய் காட் பகுதிக்குச் சென்று மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
லால்பகதூர் சாஸ்திரி குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில் “ லால் பகதூர் சாஸ்திரி பணிவானவர், உறுதியான தன்மை கொண்டவர். எளிமையைக் கடைபிடித்து, தேசத்தின் நலனுக்காக வாழ்ந்தவர். அவரின் பிறந்தநாளில் தேசத்துக்காக அவர் செய்த விஷயங்களை நாம் ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.