

வரும் 16-ம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை காண பக்தர்களை அனுமதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை கடந்த மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா, பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடைபெற்றது. இதுபோல் நடந்தது திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.
உற்சவ மூர்த்திகளின் வாகன சேவைகள் 4 மாடவீதிகளில் உலா வராமலேயே கோயிலுக்குள் ஏகாந்தமாக நடைபெற்றது. இதில், தேர் திருவிழா மற்றும் தங்க ரத ஊர்வலங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. சக்கர ஸ்நானம் கூட கோயிலுக்குள் தண்ணீர்த் தொட்டி அமைத்து அதில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாநடைபெற உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் இவ்விழாவில் வழக்கம்போல பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், பக்தர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம். அதாவது, முகக் கவசம், சமூகஇடைவெளி, கையுறை போன்றவை கட்டாய மாக்கப்படலாம். அதன் பின்னர் கோயில் வழக்கம்போல் இயங்கும் என தெரிகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருமலை திருப்பதிதேவஸ்தானத்தின் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.