

இந்தியாவின் கரோனா இறப்பு எண்ணிக்கை குறித்த சந்தேகத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பியுள்ள நிலையில், அவரைக் கவுரவிக்க 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி மீண்டும் நடத்துவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக 2-வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில் முதல் முறையாக அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, அதிபர் ட்ரம்ப் இந்தியா உள்பட சில நாடுகள் கரோனா வைரஸால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து சரியான விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதிபர் ட்ரம்ப் இந்தியாவைக் குற்றம் சாட்டியிருந்ததைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து கருத்துத் தெரிவி்த்துள்ளார். அகமதாபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் ட்ரம்ப்பை அழைத்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தியதையும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய 3 நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையை மறைத்துவிட்டன. உண்மையான விவரங்களை வெளியிடவில்லை என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்த 3 நாடுகளும்தான் காற்று மாசுக்குக் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடி, அவரின் நெருங்கிய நண்பரைப் பெருமைப்படுத்தவும், கவுரவப்படுத்தவும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவாரா?
நீங்கள் 47 ஆண்டுகளில் செய்தவற்றைவிட கடந்த 47 மாதங்களில் நான் செய்திருக்கிறேன் என அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். இந்தப் பேச்சு இந்தியாவில் உள்ள ஒருவரை உங்களுக்கு நினைவூட்டினால், அதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்” என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், “அமெரிக்காவில் கரோனாவில் நிகழ்ந்த மரணங்கள் குறித்துப் பேசினால், சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என உங்களுக்குத் தெரியாது. ரஷ்யாவில் எத்தனை பேர் கரோனாவில் மரணித்தார்கள் எனத் தெரியாது. இந்தியாவில் எத்தனை பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தார்கள் எனத் தெரியாது. இந்த 3 நாடுகளும் கரோனா மரணங்கள் குறித்து துல்லியமான, சரியான விவரங்களை அளிக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.