

ஹத்ராஸ் போன்ற சம்பவத்தை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மும்பையில் மிரா-பயாந்தர், வாசி-விரார் போலீஸ் ஆணையர் அலுவலகத்தைக் காணொலி மூலம் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடக்கின்றன. அதைப் பற்றி வழக்கமாக ஆலோசித்துவிட்டுப் பின்னர் மறந்துவிடுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது.
ஹத்ராஸ் போன்ற சம்பவங்களை மகாராஷ்டிர அரசு சகித்துக்கொள்ளாது. பெண்களுக்கு எதிரான எந்த குற்றங்களானாலும், ஈவ் டீசிங் உள்ளிட்ட எந்தக் குற்றத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸார் மீது குற்றம் செய்பவர்களுக்கு அச்சம் இருக்க வேண்டும். குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தால், குற்றம் செய்பவர்கள் அச்சப்படுவார்கள். பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ஹத்ராஸ் கூட்டு வல்லுறவு சம்பவத்துக்குப் பின் பல்ராம்பூரில் மற்றொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இரு சம்பவங்களிலும் உயிரிழந்த பெண்கள் குற்றவாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்.
மற்ற மாநிலங்கள் பற்றிப் பேசுவதையும், கருத்துச் சொல்வதையும் தவிர்த்துவிட்டு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும்.
மற்றவர்களுக்கு ஆலோசனைகளைக் கூறுவதைத் தவிர்த்துவிட்டு ஆதித்யநாத், மாநிலத்தில் காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டுவர கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.