Last Updated : 01 Oct, 2020 02:58 PM

 

Published : 01 Oct 2020 02:58 PM
Last Updated : 01 Oct 2020 02:58 PM

ஹத்ராஸுக்கு நடந்தே செல்லும் ராகுல், பிரியங்கா: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க போலீஸார் அனுமதி மறுப்பு; வாகனம் தடுத்து நிறுத்தம்

உ.பி.யின் ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று சென்றபோது, அவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஹத்ராஸுக்கு நடந்தே செல்கின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடையவே டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காததை அடுத்து, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர். போலீஸார் வலுக்கட்டாயமாக உடலைத் தகனம் செய்தனர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையி்ல் ஹத்ராஸ் சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று ஹத்ராஸ் புறப்பட்டனர்.

ஆனால், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். புதிதாக யாரும் மாவட்டத்துக்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என்று உத்தரவிட்டார். இதனால் ஹத்ராஸ் மாவட்டத்துக்குள் யாரும் நுழையாத வகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியிலிருந்து புறப்பட்டு டிஎன்டி பாலம் வழியாக காஜியாபாத் நகரம் வழியாக வருவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து காஜியாபாத்தில் அவர்களை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். ராகுல், பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் சென்றுள்ளார்.

ராகுல், பிரியங்கா காந்தி வாகனங்கள் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக பாரிக் சவுக் பகுதியில் வந்தபோது, மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகு பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் கால்நடையாக நடக்கத் தொடங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x