

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், பல்ராம்பூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 22 வயதுப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் பல்ராம்பூரில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பல்ராம்பூரில் நடந்த பலாத்கார சம்பவம் மற்றும் கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தாய் நிருபர்களிடம் கூறுகையில், “என்னுடைய மகள் செவ்வாய்க்கிழமை கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்கச் சென்றிருந்தார். அவர் திரும்பி வீட்டுக்கு வரும்போது, 4 பேர் என் மகளைக் கடத்திச் சென்று அவர்களின் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
என் மகளுக்கு மயக்க ஊசி அளி்த்து பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் ஒரு ரிக்ஷாவில் கொண்டுவந்து என் வீட்டிற்கு வெளிேய வீசிவிட்டுத் தப்பிவிட்டனர். என் மகள் படுகாயத்துடன் கால்கள் உடைக்கப்பட்ட நிலையில், முதுகு தண்டவத்தில் காயத்துடன் எழுந்து நிற்க முடியாமல் இருந்தார். என் மகளால் பேசவும் முடியவி்ல்லை. அதன்பின் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றோம். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் என் மகள் இறந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பல்ராம்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் வர்மா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வீட்டுக்குத் திரும்பும்போது படுகாயங்களுடன் வந்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபின் சிகிச்சை பலன் அளி்க்காமல் உயிழந்தார்.
மருத்துவமனை சார்பில் எங்களுக்குத் தகவல் தரப்பட்டது. ஆனால், பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் கூறினார்கள். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து ஷாகித், ஷாகில் என இருவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்.
அந்தப் பெண்ணின் கால் உடைக்கப்பட்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், உடற்கூறு ஆய்வில் அவ்வாறு எதுவும் இல்லை. பெற்றோர் முன்னிலையில் அந்தப் பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தேவிபதான் கோயிலின் பீடாதிபதி மதிலேஷ் நாத் யோகி ஆகியோர் இன்று காலை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.6,18,450 நிவாரணமாக பீடாதிபதி சார்பி்ல வழங்கப்பட்டது.
பல்ராம்பூர் சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “ஹத்ராஸ் சம்பவத்துக்குப் பின், இப்போது பல்ராம்பூரில் மற்றொரு மகள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசு ஹத்ராஸ் வழக்கில் செய்த தாமதத்தைப் போல் அல்லாமல் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.