

நாட்டை இரண்டாகப் பிளக்க விரும்பியவர்களால் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை எழுந்ததாக, அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கருத்து கூறியுள்ளார்.
தனது தந்தை ஹாசிம் அன்சாரியின் இறப்புக்கு பின் அயோத்தி நில வழக்கை தொடர்ந்து வந்த இக்பால், இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறியதாவது:
அயோத்தி நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை என சுமார் 70 வருடங்களாக நிலப்பிரச்சனை வழக்கு நடைபெற்றது. இதில் பல முக்கிய சாட்சியங்கள் மசூதிக்கு ஆதாரமாக இருந்தும் தீர்ப்பு ராமர் கோயிலுக்கு சாதகமாக வெளியானது. இதை நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்களும் ஏற்றனர்.
இதேபோல, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 வருடங் களாக நீடித்த வழக்கில் வெளியானதீர்ப்பில் சுமார் 150 சாட்சியங்கள் வலுவாக இருந்தும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
எனவே, நிலப்பிரச்சினை வழக்கை போல இன்றைய தீர்ப்பையும் நாங்கள் அனைவரும் ஏற்கிறோம். வரும் காலங்களின் பாதையில் நீதிமன்ற வழக்குகளை இனி பார்க்க வேண்டாம் என விரும்புகிறோம்.
இதனால்தான் நான் பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என முன்பே வலியுறுத்தினேன். பாபர் மசூதி இடிப்பில் 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் தங்கள் மீதான தாக்குதல், கேமரா உடைப்பு என வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இதன் மீதும் சிபிஐயிடம் ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டன.
எனினும், இந்த பழைய சம்பவங்களை நினைவுகூர்வதால் எந்தப் பலனும் இல்லை. இந்த வழக்கையும் கடந்த வருடம் நவம்பர் 9-ம் தேதிக்கு முன்பாகவே முடித்து வைத்திருக்க வேண்டும். அயோத்தியின் முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர். இங்குள்ள இந்து, முஸ்லிம்கள் இடையே எப்போதும் பிரச்சினை வந்தது கிடையாது. வெளியில் இருந்து வந்தவர்களால்தான் இந்த பிரச்சினை உருவானது. நாட்டை இரண்டாகப் பிளக்க விரும்பியவர்களால் இந்த பாபர் மசூதி-ராமர் கோயில் வழக்கு எழுந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அயோத்தியின் முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர். இங்குள்ள இந்து, முஸ்லிம்கள் இடையே எப்போதும் பிரச்சினை வந்தது கிடையாது.