

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
இந்த நாள் மிகவும் புனிதமான நாளாக மாறியுள்ளது. ராம ஜென்ம பூமிக்காக போராடிய எல்லா போராளிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த போராட்டத்தில் நான் தொடர்ந்து பங்கெடுத்துள்ளேன். அந்த நாட்கள் என் வாழ்நாளுக்கு உண்மையான அர்த்தம் அளித்தன. போராளிகளுக்கு ஒவ்வொரு வெற்றியும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது.
ராம ஜென்மபூமியை உருவாக்கும் முயற்சியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பங்களிப்பை யாரும் மறக்க முடியாது. கடைசியாக அவர் ஆற்றிய உரை இன்னும் காதுகளில் கேட்கிறது. உண்மையிலே எல்.கே.அத்வானி மிக சிறந்த தலைவர் என்பதை வரலாறு பதிவு செய்யும். எங்களது நீண்டகாலக் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்துவருகிறது. இந்த விஷயத்தில் உறுதியாக போராடிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.