

போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிப்போம் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் நேற்று தாக்கல் செய்தார்.
‘இலங்கையில் ராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டு விசாரணை அமைப்பால் போர்க்குற்றத்தை விசாரித்து நீதியை நிலைநாட்ட முடியாது. சர்வதேச நீதிமன்றத்தால் மட்டுமே நேர்மையான விசாரணையை நடத்த முடியும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் அறிக்கை கடந்த வாரமே இலங்கை அரசிடம் அளிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு தனது பதிலை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பிறகு மனித உரிமை, சட்டம், நீதி, நல்லாட்சி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்படும்.
இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழ்நிலை ஏற்படாது என்று உறுதியளிக்கிறோம். சமூக நல்லிணக்கத்தைப் பேண நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து இன மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்படும். அர்த்தமுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். ஐநா. மனித உரிமை ஆணையத்தின் ஒத்துழைப்பை பெற்று அனைத்து இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட விசாரணை அறிக்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை மட்டுமே. அது குற்றவியல் விசாரணை அறிக்கை அல்ல. ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் கவனமுடன் பரிசீலிப்போம். ஆணையத்தின் பரிந்துரைகளை புதிய பாதைக்கான வழிகாட்டி என்றே கருதுகிறோம்
இவ்வாறு இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜெனீவாவில் முகாமிட்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா நிருபர்களிடம் கூறியதாவது: போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் ஜனவரியில் தொடங்கப்படும். சர்வதேச ஒத்துழைப்புடன் இந்த விசாரணையை நடத்துவோம். ஒன்றரை ஆண்டுகளுக்குள் விசாரணை நிறைவு பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ராஜித சேனாரத்னா கொழும்பில் கூறியதாவது:
ஜெனீவா மாநாட்டில் வரும் 24-ம் தேதி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இலங்கைக்கு ஆதரவான அந்த தீர்மானத்துக்கு சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தீர்மானத்துக்குப் பின்னரே ஐ.நா. விசாரணை அறிக்கை தொடர்பாக அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே மனித உரிமை கண்காணிப்பகம் என்ற சர்வதேச அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.