‘‘பாஜக தலைவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ்’’ - யோகி ஆதித்யநாத் கடும் சாடல்

‘‘பாஜக தலைவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ்’’ - யோகி ஆதித்யநாத் கடும் சாடல்
Updated on
1 min read

பாஜக தலைவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை தொடுத்தது, வாய்மையே வெல்லும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

தலைவர்கள் மீது தனி வழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது.

இதில், ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.

அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு 2017, ஏப்ரல் 19-ம் தேதி அளித்த தீர்ப்பில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.

லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில், “ குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக சிபிஐ உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி, ஒலி ஆதாரங்களில் நம்பகத்தன்மையும் இல்லை” எனத் தீர்ப்பளித்தார்.


இதுகுறித்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

‘‘வாய்மையே வெல்லும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அரசு இந்த வழக்கை தொடுத்தது. பாஜக தலைவர்கள், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், இந்து சன்னியாசிகள் மீது அவதூறு கிளப்புவதற்காக திட்டமிட்டு காங்கிரஸ் அரசு புனைந்த பொய் வழக்கு இது. சதிக்கு காரணமானவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in