ஹத்ராஸ் சம்பவம்; கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் உடல் அதிகாலையில் தகனம்: போலீஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

போராட்டக்கார்களை போலீஸார் விரட்டிய காட்சி: படம் | ஏஎன்ஐ.
போராட்டக்கார்களை போலீஸார் விரட்டிய காட்சி: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரின் உடல் இன்று அதிகாலை தகனம் செய்யப்பட்டது.

போலீஸாரின் நெருக்கடியால், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது என்று பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், பெண்ணின் பெற்றோரின் விருப்பப்படிதான் உடல் தகனம் செய்யப்பட்டது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணின் உறவினர் போராட்டம் நடத்திய காட்சி.
பெண்ணின் உறவினர் போராட்டம் நடத்திய காட்சி.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் கடந்த 14-ம் தேதி ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்த செய்தி வெளியானதும் சமூக வலைதளத்தில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் , சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்படைந்தது. ஹத்ராஸ் நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவே உத்தரப் பிரதேச போலீஸார் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு, அவரது உறவினர்களை அழைத்துக் கொண்டு டெல்லியிருந்து ஹத்ராஸ் நகருக்கு வந்தனர். வழியெங்கும் கடும் பாதுகாப்புடன் போலீஸார் அந்தப் பெண்ணின் உடலை எடுத்து வந்தனர்.

இன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் அந்தப் பெண்ணின் உடல் ஹத்ராஸ் அருகே சந்த்பா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பூல் கார்கி கிராமம் அருகே தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பானது.

உயிரிழந்த பெண் தகனம் செய்யப்பட்டது குறித்து அவரின் தந்தை கூறுகையில், “என் மகளின் உடல் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்குள் தகனம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.

பெண்ணின் சகோதரர்
பெண்ணின் சகோதரர்

அந்தப் பெண்ணின் சகோதரர் கூறுகையில், “டெல்லியிலிருந்து வலுக்கட்டாயமாக போலீஸார் எனது தங்கையின் உடலை எடுத்துக்கொண்டு, எங்களையும் அழைத்துக்கொண்டு போலீஸார் ஹத்ராஸ் நகருக்கு அழைத்து வந்தனர். நாங்கள் ஹத்ராஸ் வந்தவுடன் சிறிது நேரத்தில் என் சகோதரியின் உடல் தகனம் செய்யப்பட்டது” எனக் குற்றம் சாட்டினார்.

அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட அந்த இரவில் உ.பி.யின் உயர் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் முன்னிலையில்தான் தகனம் நடந்துள்ளது. கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் கலவரத் தடுப்பு வாகனம், அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், “எங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தேவை, என்ன மாதிரியான அரசியல் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூட சிலர் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தனர்.

ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. விக்ராந்த் விர் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளும் சட்டப்படிதான் நடந்தன. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்தின்படிதான் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in