Published : 30 Sep 2020 01:03 PM
Last Updated : 30 Sep 2020 01:03 PM

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைத்தால் அடுத்தடுத்த தேர்வுகளுக்குப் பாதிப்பு வரும்: உச்ச நீதிமன்றத்தில் யூபிஎஸ்சி பதில் 

டெல்லி

இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வை ஒத்திவைத்தால் அது சிவில் சர்வீஸ் தேர்வின் சுழற்சி முறையையே பாதிக்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆட்சிப் பணி என அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்பட்டு 1000-க்கும் குறைவான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு முதல் நிலை, முதன்மை, நேரடித் தேர்வு என மூன்று வகைத் தேர்வுகளும் பின்னர் பயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்கான தேர்வு இந்த ஆண்டு கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. மே 31-ம் தேதி நடத்தப்படவேண்டிய தேர்வு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது அக்.4 ஆம் தேதி அன்று நடக்கிறது. இதை எதிர்த்தும் தேர்வை ஒத்திவைக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வசீர்ரெட்டி கோவர்த்தனா சாய் பிரகாஷ் மற்றும் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் 20-க்கும் மேற்பட்டவர்களும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்து தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரியிருந்தனர்.

அவர்கள் மனுவில், “இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் ஆபத்தான இந்நேரத்தில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது கரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்களான மழை, நிலச்சரிவு, வெள்ளம், தொடர் மழை போன்றவையும் நிகழ்கின்றன. இவை மனுதாரர் மட்டுமல்லாமல் தேர்வெழுதும் பலரின் உயிரையும், உடல்நலத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

தாங்கள் வாழும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தால் தேர்வு எழுதும் பலரும் பாதுகாப்பில்லாத சுகாதாரச் சூழலால் பல்வேறு கற்பனை செய்ய முடியாத கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். வேறு வழியின்றி ஹோட்டல், விடுதிகளில் குடும்பத்தினருடன் தங்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

தேர்வு மையங்களையும் யூபிஎஸ்சி நிர்வாகம் அதிகரிக்காததால், தேர்வு எழுதுவோர் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை பயணித்து வந்து தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். ஆதலால், வரும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு முன் காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது யூபிஎஸ்சி தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக நடத்தப்படவேண்டும் என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் வழக்கை செப்.30க்கு எடுத்துக்கொள்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் யூபிஎஸ்சி தரப்பு இன்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு அக்டோபர் 4-ம் தேதி தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து யூபிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என ஆணையத்துக்குக் கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே 31-05-2020 நடத்தப்படவேண்டிய இந்தத் தேர்வு கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு உரிய அவகாசத்தை வழங்கியுள்ளது.

யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைத்தால் காலந்தோறும் பின்பற்றிவரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகள் தேர்வு நடப்பதையும் சேர்த்து பாதிக்கும். யூபிஎஸ்சி தேர்வுகளைத் தள்ளிவைத்தால் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு அரசின் முக்கியப் பொறுப்புகளில் அதிகாரிகளை நியமிப்பதில் பாதிப்பை உருவாக்கும்.

நீட் தேர்வுகளை நடத்த அனுமதித்ததைப் போல யூபிஎஸ்சி தேர்வுகளையும் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், என்டிஏ மற்றும் நேவல் அகாடமி தேர்வுகள் கடந்த செப்.9 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

அதேபோல, யூபிஎஸ்சி தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. யூபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 60 சதவீதம் பேர் ஏற்கெனவே நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டும் யூபிஎஸ்சி தேர்வுகளை எழுத விரும்புவோருக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதுவே சம உரிமை ஆகும்.

ஏற்கெனவே இந்தத் தேர்வுகளை நடத்த 50.39 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் தேர்வுகளை ரத்து செய்தால் அது ஆணையத்துக்கு இழப்பை ஏற்படுத்தும். தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதோடு, உரிய வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு மாநிலத் தலைமைச் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணைக்குப் பின் உத்தரவு வரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x