

நவீன் ஜிண்டால் குழுமத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் அப்போதைய பிரதமரும், நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் அறிவார் என்று முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மது கோடா புதனன்று சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் மன்மோகன் சிங்கையும் குற்றம் சாட்டப்படுவோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறிய மது கோடா, "அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் ஜிண்டால் குழுமத்துக்கு சலுகை காட்டப்பட்டதில் சதி இருக்குமேயானால் அது அப்போதைய பிரதமரும், நிலக்கரித்துறை அமைச்சருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என்று மதுகோடா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசரிடம் தெரிவித்தார்.
மேலும், ஜிண்டால் குழுமத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய பிரதமர் காத்துக் கொள்ள முடியாது என்றும் சிபிஐ கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் (இவரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்) ஜிண்டாலுக்கு ஒதுக்கீடு வழங்க விரும்பினார் என்றாலும், "இதன் பின்னணியில் இருந்து இதற்கு ஒப்புதல் அளித்தவர் அப்போதைய பிரதமர்" என்று மதுகோடா வழக்கறிஞர் வாதாடினார்.