

லாலு பிரசாத் யாதவ்வின் இரண்டு மகன்களான தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் யாதவ் சமூகத்தினர் பெரும்பான்மையினராக வசிக்கும் மகுவா மற்றும் ராகோபூர் தொகுதிகளிலிருந்து போட்டியிடுகின்றனர்.
நிதிஷ் குமார் அறிவித்த மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் இவர்கள் இருவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
வைசாலி மாவட்டத்தில் உள்ள இந்த 2 தொகுதிகளும் 2010-ல் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினுடையதாக இருந்தது. மஹுவா தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்திர ராய் இம்முறை முடிவுகள் மாறும் என்ற அச்சத்தினால் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் சேர்ந்தார். இவரை அக்கட்சி இந்தத் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது.
ராகோபூரில் 2010 தேர்தலில் ராப்ரி தேவியை தோற்கடித்த சதீஷ் குமார் பாஜக-வில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி சுபேதார் சிங் என்பவரை மக்தும்பூர் தொகுதியில் களமிறக்குகிறது. மாஞ்சி இமாம் கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் கடும் அதிருப்தி நிலவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.