ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல்

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல்

Published on

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு அமெரிக்கா தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், வாஜ்பாய் அரசில் பல்வேறு அமைச்சகப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளால் ராணுவ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டு ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் (செப். 27) காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங் காலமானார்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “புகழ்பெற்ற மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங். இந்தியக் குடியரசுக்குச் செய்த சேவை, அமெரிக்க-இந்தியக் கூட்டாண்மைக்குச் செய்த நீடித்த பங்களிப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். ஜஸ்வந்த் சிங் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in