

கேரளாவில் தரைதளத்தில் இருந்து சீலிங்கில் ஓட்டை போட்டு முதல் தளத்தில் இயங்கி வந்த வங்கியில் கொள்ளை நடந்துள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள், பணத்துடன் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது செரு வத்தூர். இங்குள்ள ஒரு கட்டிடத் தின் முதல் மாடியில் விஜயா வங்கி கிளை இயங்கி வருகிறது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிக்கு விடுமுறை. திங்கட்கிழமையான நேற்று வழக்கம்போல் ஊழியர் கள் வங்கிக்கு வேலைக்கு வந்தனர். வங்கியை திறந்து பார்த்த போது, அங்கிருந்த 3 லாக்கர் களில் 2 லாக்கர்கள் உடைக்கப் பட்டிருந்தன. ஒரு லாக்கர் மட்டும் உடைக்காமல் இருந்தது.
உடைக்கப்பட்ட 2 லாக்கர்களில் இருந்த ஏராளமான நகைகள், பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. அதை பார்த்த வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து போலீஸார் வந்து விசாரித்தனர். அப்போது, கட்டிடத்தின் தரைதளத்தில் இருந்து கூரையில் (சீலிங்) துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வங்கியில் ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கமாக ரூ.3 லட்சம் கொள்ளை போயிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வங்கியில் கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த வங்கி கட்டிடத்தின் தரைதளத்தில் சில நாட்களாக கட்டுமான பணிகள் நடந்துள்ளன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதை தெரிந்து கொண்டு வங்கியில் கொள்ளை அடித்துள்ளனர். எனவே, உள்ளூர் ஆட்களின் உதவியுடன் வெளியாட்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கேரளாவில் இதே காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் வங்கியில் கொள்ளை நடந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.