பிஹார் தேர்தலில் உதயமாகும் மூன்றாவது அணி? - புதிய கூட்டணி; ஒவைஸி அறிவிப்பு

பிஹார் தேர்தலில் உதயமாகும் மூன்றாவது அணி? - புதிய கூட்டணி; ஒவைஸி அறிவிப்பு
Updated on
1 min read

பிஹார் தேர்தலில் தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைருமான அசாதுதீன் ஒவைஸி அறிவித்துள்ளார்.

243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கரோனா வைரஸ், பிஹார் மாநிலத்தில் பெய்த மழை, அதனால் உருவான வெள்ளம் போன்றவற்றால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.

2-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்டத்தில் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 3-ம் கட்டத் தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறி விட்டது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

லோக்தாந்திரிக் ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவும் மெகா கூட்டணியிலிருந்து விலகும் சூழல் தெரிகிறது.

இந்தநிலையில் ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைருமான அசாதுதீன் ஒவைஸி பிஹார் தேர்தலில் தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து விட்டனர். மாற்று அரசியலை எதிர்பார்க்கின்றனர். மக்கள் விரும்பும் நல்லாட்சியை கொடுக்க முடியும் என நம்புகிறோம். இந்த தேர்தலில் தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சியுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கிறோம். இதில் வேறு சில கட்சிகளும் சேரலாம். இதன் மூலம் பிஹாரில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் உதயமாகும். எங்கள் அணிக்கு ஐக்கிய ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணி என பெயர் சூட்டியுள்ளோம்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in