

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இயற்கை மருத்துவத்தை பற்றிய இணையக் கருத்தரங்குகள் நடத்தப்படவிருக்கின்றன.
புனேயில் உள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவத்தை பற்றிய இணையக் கருத்தரங்குகளை நடத்த இருக்கிறது.
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் தேசிய இயற்கை மருத்துவ தினமான 2020 நவம்பர் 18 வரை நடத்தப்படவிருக்கும் இந்த இணையக் கருத்தரங்குகள், தற்சார்பு ஆரோக்கியம் மூலம் தற்சார்படைதல் குறித்த காந்தியடிகளின் தத்துவங்கள் மீது கவனம் செலுத்தும்.
எளிதாகக் கிடைக்கும் இயற்கை மருத்துவப் பொருட்களின் மூலம் மக்கள் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை இந்த இணையக் கருத்தரங்குகள் வலியுறுத்தும்.
செயல்முறை விளக்கங்களின் மூலம் இயற்கை மருத்துவ நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும். உரையாடல்கள், விவாதங்கள் போன்ற பின்னூட்ட நிகழ்வுகளும் நடத்தப்படும்.
நாடு முழுவதிலும் இருந்தும், நாட்டின் எல்லைகளை தாண்டியும் இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள் மகாத்மா காந்தியின் சுகாதார சிந்தனைகளைப் பற்றி பேச அழைக்கப்படுவார்கள்.