பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் டெல்லியில் மரணம்: யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் டெல்லியில் மரணம்: யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் மாவட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்து போனார், இதனையடுத்து பெண்களுக்கு பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேசம்தான் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

செப்டம்பர் 14ம் தேதி உ.பி.யின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனைக் கண்டித்த பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “அரக்கத்தனமான கொடூர நடத்தையினால் தலித் பெண் சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்து போய்விட்டார்.

2 வாரங்களாக இந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடி வந்தார்.

ஹத்ரஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெரிய அளவுக்கு சீரழிந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் சுவடு கூட இந்த மாநிலத்தில் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர்.

இந்தப் படுபாதகத்தைச் செய்தவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் அலிகாரிலிருந்து டெல்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.

செப்.14ம் தேதி இந்தப் பெண் 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட அவர் செவ்வாய் கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in