

சென்னையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன.
இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கோரிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் இந்த முடிவு குறிப்பிட்ட மாநிலங்களில் பயங்கரவாத, தீவிரவாத தடுப்பு விசாரணையை துரிதப்படுத்த உதவும்.
தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் என்.ஐ.ஏ. விசாரணைத் திறனை வளர்த்தெடுக்க இது உதவும். மேலும் இத்தகைய குற்றங்களின் தடயங்களை விரைவில் சேகரிக்கவும் என்.ஐ.ஏ. அலுவலகம் இந்த மாநிலங்களில் இருப்பது உதவிகரமாக இருக்கும்.
தற்போது என்.ஐ.ஏ. கிளைகள், குவஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்பூர், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ளது.
இந்நிலையில் 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ.கிளைகளை விரிவுபடுத்துவது தீவிரவாத குற்றங்களுக்கு எதிரான தடுப்பு மற்றும் விசாரணையை துரிதப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.