

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாளான நேற்று காலை, ஹனுமன் வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 6-ம் நாளான நேற்று காலை, உற்சவரான மலையப்ப சுவாமி கோதண்டராமர் அலங்காரத்தில் ஹனுமன் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை 4 திருமாட வீதிகளில் உற்சவரின் வீதி உலா நடைபெற்றது.
வாகன சேவையின் முன்பு, காளை, யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன. இவற்றை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனமாடிச் சென்றனர். வாகன சேவையில் பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
மாலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவர் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டு தங்க குதிரைகள் பூட்டிய தங்கத் தேரை ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 5 மணி முதல் 7 மணி வரை தேர் பவனி நடைபெற்றது.
இரவு யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பரின் திருவீதி உலா நடந்தது. இவ்விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
கருட சேவையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 1 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்ன பிரசாதம் வழங்கப்பட்டதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சாதாரண நாட்களில் 50 முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால் கருட சேவை நடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. 4-வது ஹாலில் பஃபே முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் பக்தர்கள் பசியாற முடிகிறது.
கருட சேவையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மதியம் முதலே காத்திருந்து வாகன சேவையை தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் இருந்த பக்தர்களுக்கும் குடிநீர், சிற்றுண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன என்றார்.