தீவிரவாதிகளின் புகலிடமாகி விட்டதால் பெங்களூருவில் என்ஐஏ கிளை வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தேஜஸ்வி சூர்யா மனு

தீவிரவாதிகளின் புகலிடமாகி விட்டதால் பெங்களூருவில் என்ஐஏ கிளை வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தேஜஸ்வி சூர்யா மனு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, அண்மையில் இளைஞர் பாஜக.வின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். டெல்லி சென்ற அவர் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அமைக்கக் கோரி மனு அளித்தார்.

இதுகுறித்து தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:

அண்மைக் காலமாக பெங்களூருவில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எல்லா வகையான தீவிரவாத கும்பல்களும் கருவாக உருவாகி, பயிற்சி பெற்று வளரும் இடமாக பெங்களூரு மாறிவிட்டது. அண்மையில் நடந்த கலவரத்தில் கூட ஒரு தீவிரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தீவிரவாதிகளின் நடமாட்டதால் பெங்களூருவில் பொது அமைதியும் பொருளாதாரமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலக கிளையை அமைக்க வேண்டும்.

தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் ஹைதராபாத்தில் இருந்து வந்து விசாரணை நடத்திச் செல்கின்றனர். பெங்களூருவிலே அலுவலகம் இருந்தால் கூடுதல் கவனத்தோடு குற்றச்செயல்களை தடுக்க முடியும். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை ஒழிக்க முடியும் என்று அமித் ஷாவிடம் கோரினேன். அதனை ஏற்றுக் கொண்ட அவர், உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுப்பதாக கூறினார்.

தலைமை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார்.

இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘அமைதியான நகரமாக இருக்கும் பெங்களூருவை, தீவிரவாதிகளின் புகலிடம் என்று தேஜஸ்வி சூர்யா கூறியது கண்டிக்கத்தக்கத்து. பெங்களூருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். தேஜஸ்வி சூர்யாவை பாஜக கட்சியை விட்டு நீக்க வேண்டும்’’ என்று விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in