

‘‘கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை கண்டு ஊழல் புரிந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர், அதனால், மத்திய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் காங்கிரஸ் செயற் குழுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய கட்சி தலைவர் சோனியா, ‘‘நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதிகளாக அள்ளி வீசினார். அவை எல்லாம் வெற்று பேச்சுகள். செயலில் ஒன்றும் காணவில்லை’’ என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் ‘ஹவாபாஸி’ (சவடால் பேர்வழி) என்று மோடியை சோனியா விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘நான் ஹவாபாஸி என்றால், அவர்கள் 'ஹவாலாபாஸி' (ஊழல்பேர்வழிகள் ) என்று மோடி கடுமையாக கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக நிர்வாகிகளை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகை யில், ‘‘கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸால் மீண்டுவர முடியவில்லை. அதற்காக அரசு நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போடும் தந்திரத்தை கையாண்டு வருகிறது. கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஊழல்வாதிகள் பீதி அடைந்துள்ளனர். அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்’’ என்றார்.
மோடி மேலும் கூறியதாவது:
கடந்த மழைக்கால நாடாளு மன்ற கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியதற்கு காங்கிரஸ்தான் காரணம். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ஏற்க மற்ற எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு கட்சி (காங்கிரஸ்) மட்டும் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டது. சண்டை போடுவதற்கென்று தனி இடம் உள்ளது. தேர்தலில் மக்கள் புறக்கணித்த ஒரு கட்சி நாடாளுமன்றத்தை முடக்குவது சரியல்ல. அவையை நடத்த விடுங்கள் என்று பகிரங்கமாக நான் வேண்டுகோள் விடுத்தேன். எனினும் அந்த கட்சி கேட்கவில்லை.
உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன. ஆனால், இந்தியா மட்டும் தனது சொந்தக் காலில் பலமாக நிற்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்தி கொண்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை நாம் வீணடிக்க கூடாது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் நாட்டின் நலன் கருதி செயல்படும் என்று நம்புகிறேன்.
தேர்தலில் தோல்வி அடைந்தால்,கட்சியை எப்படி பலப்படுத்துவது என்று சுய ஆய்வு செய்வதுதான் அரசியல் கட்சிகளுக்கு நல்லது. மக்கள் ஒரு கட்சியை 5 ஆண்டு ஆட்சி செய்ய தேர்வு செய்தால், அதை மற்ற அரசியல் கட்சிகள் மதிக்க வேண்டும். கடந்த 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கிண்டல் செய்தார். அப்போது ஏன் இந்த தோல்வி என்று பாஜக ஆராய்ந்தது. மற்றவர்கள் மீது பழி போடவில்லை. கட்சியை சுய ஆய்வு செய்தோம்.
இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைய மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். பாஜக ஆட்சி யில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் நுகர்வோர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அத்துடன் ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி உட்பட பல திட்டங்கள் சாதாரண மக்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஆரவாரமும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், சாதாரண மக்களின் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
இந்தியை மறந்தால் நாட்டுக்கு நஷ்டம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக இந்தி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
வரும் காலத்தில் டிஜிட்டல் உலகில் ஆங்கிலமும் சீன மொழியும் ஆதிக்கம் செலுத்தும். எனவே, இந்தி மொழியையும் பரவலாக்க வேண்டும். இந்த மொழியை செழுமைப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் ஆங்கிலம், சீனம், இந்தி ஆகிய 3 மொழிகள்தான் டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்தும். இந்தியை நாம் மறந்தால், அது நாட்டுக்கு நஷ்டம்.
உலகில் 6000 மொழிகளில் 90 சதவீத மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக மொழி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, இந்தி மொழியை மட்டும் வளர்க்காமல், அழியும் அபாயத்தில் உள்ள மொழிகளையும் காப்பாற்றிப் பேண வேண்டும். மொழி இல்லாவிட்டால் இலக்கியம் எப்படி நிலைக்கும். குஜராத்தில் நான் தேநீர் விற்பனை செய்து வந்து போதுதான் இந்தி மொழியை சரளமாக பேச கற்றுக் கொண்டேன். இவ்வாறு மோடி பேசினார்.