

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து எல்லை பாது காப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா செக்டார் சர்வதேச எல்லைப் பகுதி யில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் படையி னர் 2 முறை பீரங்கி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பிஎஸ்எப் தரப்பில் பாதிப்பு ஏதுமில்லை” என்றார்.
இதுபோல் பூஞ்ச் மாவட்டம், பிம்பர் காலி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 11.20 முதல் 11.30 வரை பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார்.
“பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியத் தரப்பில் பாதிப்பு ஏதுமில்லை. இத்தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்பட்டது” என்றும் அவர் கூறினார்.
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, இம்மாதத்தில் 4 முறை பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த மாதம் பாகிஸ்தான் 57 முறை மேற்கொண்ட தாக்குதலில் 2 ஜவான்கள் உட்பட 11 பேர் இறந்தனர்.