வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கான மரண சாசனம்: ராகுல் காந்தி விமர்சனம்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் அனைத்தும் விவசாயிகளுக்கான மரண சாசனம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வரம்பு மீறிச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களையும் மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது, திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறி குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
வேளாண் மசோதாவுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கடந்த 24 முதல் 26-ம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம், பாரத் பந்த் ஆகியவற்றை நடத்தினர். இந்நிலையில், இந்த 3 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டார்.
இந்த வேளாண் மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “நம்முடைய விவசாயிகளுக்கான மரண தண்டனை சாசனம்தான் இந்த வேளாண் மசோதாக்கள். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல்கள் நசுக்கப்பட்டன. இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதற்கான அடையாளம் இங்கே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருநாளேட்டின் செய்தியின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார். அதில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கையில் அமர்ந்தபடியே தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரினர். ஆனால், மத்திய அரசோ இருக்கையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கிறது. இந்தச் செய்தியின் இணைப்பை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
