

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வங்கிக் கடன் பெற்றவர்கள் கடனைச் செலுத்தும் தொகைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவைத் தெரிவிப்போம் என்று மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் முடிவு எடுத்து அதன் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் நகல்களை அனைத்து மனுதாரர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர்க் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு கடன், வட்டி, வட்டிக்கு வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 31-ம் தேதிவரை வாராக் கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் தள்ளுபடி செய்யப்படுமா என்பது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்று கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு உரிய முடிவு எடுக்க கால அவகாசம் தேவை என்று மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொண்டதையடுத்து, வழக்கை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது நீதிபதிகள், துஷார் மேத்தாவிடம், வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதில் என்ன முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்று கேட்டனர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, “பல்வேறு பொருளாதார இடர்ப்பாடுகளை, சிக்கல்களை அரசு சந்தித்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவை அறிவிக்கிறோம். இந்த விஷயம் குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்பது உறுதியானது. இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் சூழலும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. முடிவு எடுத்தபின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அதற்குப் பிரதான மனுதாரரான கஜேந்திர சர்மாவின் வழக்கறிஞர் ராஜீவ் தத்தா, “இது மிகவும் தீவிரமான விவகாரம். இதில் வங்கிகள் தீவிரம் புரியாமல் தேவையில்லாமல் காலதாமதம் செய்கின்றன. சாதாரண விவகாரம் போல் கையாள்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “மத்திய அரசின் முடிவுகள் அனைத்தையும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் எங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்களுக்கும் பிரமாணப் பத்திரத்தின் நகலை அனுப்பி வைக்க வேண்டும். முடிந்தவரை விரைவாக மனுதாரர்கள் அனைவருக்கும் பிரமாணப் பத்திர நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
உங்களின் கொள்கை என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எதை வேண்டுமானாலும் புழக்கத்துக்குக் கொண்டுவாருங்கள். இனிமேல் இந்த விவகாரத்தில் தாமதம் செய்யமாட்டோம். ஒத்திவைக்க மாட்டோம். அக்டோபர் 5-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். மத்திய அரசின் முடிவுகள் பதிவு செய்யப்பட்டு பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யப் பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.