Last Updated : 28 Sep, 2020 09:14 AM

 

Published : 28 Sep 2020 09:14 AM
Last Updated : 28 Sep 2020 09:14 AM

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம்: கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி

எடியூரப்பா

பெங்களூரு

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளானசனிக்கிழமை மாலை 6 மணிக்குஎதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ‘‘கரோனா தடுப்புக்காக எடியூரப்பா அரசு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருக்கிறது. மேலும் பெங்களூரு வளர்ச்சி கழக ஒப்பந்ததாரருடன் விஜயேந்திரா பேரம் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தொடர் ஊழல் புகாரால் எடியூரப்பா அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த அரசு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அல்ல. காங்கிரஸ் மஜத கூட்டணி அரசை கவிழ்த்து, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை குதிரைப் பேரம் மூலம் பாஜகவுக்கு இழுத்து அமைக்கப்பட்ட அரசுஆகும். இதனால் நாங்கள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கைஇல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என வலியுறுத்தினார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பதிலுக்கு காங்கிரஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முதல்வர் எடியூரப்பா, ‘என் மகன் விஜயேந்திரா லஞ்சம் வாங்கியதாகவோ, என் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டதாகவோ நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இல்லையென்றால் சித்தராமையா அரசியலில் இருந்து விலக தயாரா? என் மகன் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு கூட தயாராக இருக்கிறேன்''என்றார்.

நீண்ட விவாதத்துக்கு பின் இரவு 10.55 மணியளவில் பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர காகேரி, காங்கிரஸார் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது கரோனா தொற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

அவையில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்ததால், அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர காகேரி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x