Last Updated : 27 Sep, 2020 07:43 PM

 

Published : 27 Sep 2020 07:43 PM
Last Updated : 27 Sep 2020 07:43 PM

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த ஞாயின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பங்கேற்றன.

ஒரு கட்டத்தில் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையி்ன் துணைத் தலைவர் மேஜையில் இருந்த காகிதம் போன்றவற்றைக் கிழித்து வீசி எறிந்தனர். இதையடுத்து, வரம்பு மீறி செயல்பட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களையும் மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் வெங்கய்ய நாடு உத்தரவிட்டார்.

ஆனால், சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும்வரை அவைக்கு வரப்போவதில்லை எனக் கூறி மாநிலங்களவை எம்.பி.க்கள் அவையைப் புறக்கணத்தனர். மக்களவை எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்து அவையைப் புறக்கணித்தனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் கடந்த புதன்கிழமையோடு ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கடந்த வாரம் சந்தித்து, வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது. அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 24 முதல் 26-ம்தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். ரயில் மறியல் போராட்டம், பாரத் பந்த் நடத்தினர்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் வெளியேறியது. ஏற்கெனவே மத்திய அரசிலிருந்து வெளியேறிய நிலையில் கூட்டணியிலிருந்தும் வெளியேறியது.

இதனால் குடியரசுத் தலைவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதாவுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் விவசாயிகள் வர்த்தக மசோதாவின்படி, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மண்டிகள் தவிர்த்து தங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் எந்த இடத்திலும் விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு விலை உறுதியளிக்கும் வேளாண் சேவை மசோதா என்பது, விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மூலம், வெங்காயம், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் வித்துகள் போன்றவை அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த மசோதாக்கள் அனைத்தும் சட்டமாகியுள்ளன. இவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து மத்திய அரசு அரசாணை வெளியிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x