Last Updated : 27 Sep, 2020 01:48 PM

 

Published : 27 Sep 2020 01:48 PM
Last Updated : 27 Sep 2020 01:48 PM

தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்க விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்கும் முயற்சியில் விவசாயிகள், வேளாண் துறையின் பங்கு முக்கியமானது. தேசத்தின் வேளாண் துறையை விவசாயிகள் வலிமைப்படுத்தி வருகிறார்கள் என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 68-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

''தற்சார்பு பொருளாதாரத்தையும், தற்சார்பு தேசத்தையும் உருவாக்குவதில் விவசாயிகள், வேளாண் துறையின் பங்கு முக்கியமானது. அதிலும் விவசாயிகள், தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் பொருளாதாரத் தத்துவங்களின் சாராம்சத்தைப் பின்பற்றினால், தற்சார்பு இந்தியா குறித்த பிரச்சாரம் தேவைப்படாது. இந்தியா விரைவாக தற்சார்பு நாடாக மாறிவிடும்.

ஏபிஎம்சி சட்டத்திலிருந்து பழங்கள், காய்கறிகள் பட்டியலை நீக்கியதிலிருந்து விவசாயிகள் அதிகமாக சில மாநிலங்களில் பயன்பெற்று வருகிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும், தடையின்றித் தங்களுக்கு விருப்பமான விலையில் விற்பனை செய்ய முடியும்.

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் நம்முடைய வேளாண்துறை அதன் வலிமையை வெளிப்படுத்தி இருக்கிறது. தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் விவசாயிகளின் முயற்சி பெரும்பங்கு வகிக்கிறது. வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களை அதிகமாக, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும்போது, அளப்பரிய பலன்களைப் பெற முடியும்.

கதை சொல்லுதல் என்பது நம்முடைய பழங்காலப் பாரம்பரியம். இந்தக் காலத்தில் அறிவியல் ரீதியான கதைகளைக் கூறுதல் அதிகமான பிரபலத்தைப் பெறுகின்றன.

ஏராளமான மக்கள் கதை சொல்லும் திறன் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளனர். இந்தியா பழங்கதைகளைச் சுவைபடச் சொல்வதில் புனிதமான பாரம்பரியத்தை வைத்துள்ளது.

இந்தக் கரோனா வைரஸ் காலத்தில் மனிதர்கள் ஒவ்வொருவருடன் கலந்துரையாடுதல் குறைந்துவிட்டது. ஆதலால், கதை சொல்லுதல் மூலம் நாம் உரையாடலை வளர்க்க முடியும். கீதா உபதேசம், பஞ்சதந்திரக் கதைகளைக் கொண்ட பாரம்பரிய தேசத்தில் நாம் வாழ்கிறோம் என்பதில் பெருமைகொள்ள வேண்டும்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான கதை சொல்லும் நிகழ்வுகள் இருக்கின்றன. வில்லுப்பாட்டு, கிசாகோய் போன்றவை இருக்கின்றன. பெங்களூருவில் உள்ள பெங்களூரு கதை சொல்லும் சமூகத்தினர், அபர்ணா ஆத்ரேயா கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நம்முடைய மண்ணின் மாண்பைக் காக்கவும், எல்லைகளைப் பாதுகாக்கவும், நமது ராணுவ வீரர்கள் துல்லியத் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நினைவுகூர்கிறேன்.

இந்தியாவில் இன்னும் கரோனா வைரஸ் அச்சம் குறையவில்லை. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் இல்லாமல் செல்லக்கூடாது. குறைந்தபட்சம் இரு நபர்களுக்கு இடையே 2 அடி இடைவெளி இருப்பது அவசியம்.

கரோனா வைரஸை எதிர்க்க இரு விதிகளும் நமக்கு ஆயுதங்கள். இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதில் நாம் தளர்வு காட்டக்கூடாது. கரோனா தடுப்பு மருந்து வரும்வரை இந்த விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x