Last Updated : 27 Sep, 2020 11:27 AM

 

Published : 27 Sep 2020 11:27 AM
Last Updated : 27 Sep 2020 11:27 AM

ஜஸ்வந்த் சிங் மறைவு: பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அசோக் கெலாட் இரங்கல்

பிரதமர் மோடி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைசச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், வாஜ்பாய் அரசில் பல்வேறு அமைச்சகப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளால் ராணுவ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டு ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங் காலமானார்.

ஜஸ்வந்த் சிங்கின் உடல் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஜோத்பூரில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியி்ல், “இந்த தேசத்துக்காக விடாமுயற்சியுடன் ஜஸ்வந்த் சிங் தனது கடமைகளையும், பணிகளையும் செய்துள்ளார்.

முதலில் ராணுவ வீரராகவும், பின்னர் அரசியலிலும் இணைந்து தனது பங்களிப்பை தேசத்துக்காகச் செய்தார். வாஜ்பாய் அரசில், முக்கியமான அமைச்சகப் பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். அவரின் மறைவு என்னை வேதனைப்படுத்துகிறது.

அரசியலிலும், சமூகத்துக்கும் ஜஸ்வந்த் சிங் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. பாஜகவை வலிமைப்படுத்திய தலைவர்களில் ஒருவராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். எங்களுக்குள் நடந்த உரையாடல்கள் எப்போதும் நினைவில் நிற்பவை. ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்விந்தர் சிங்கிடம் பேசினேன். ஜஸ்வந்த் சிங் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த தேசத்துக்குச் சேவை செய்தவகையில் ஜஸ்வந்த் சிங்கின் புத்திசாலித்தனமான திறமை நினைவுகூரத்தக்கது. ராஜஸ்தானில் பாஜகவை வலிமைப்படுத்திய முக்கியத் தலைவராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ராஜஸ்தானின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x