

நாட்டில் உள்ள முக்கிய இந்துகோயில் இணையதளங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நேற்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா சமஸ்தானத்திலிருந்து ஹரிசந்திர பகாடே தலைமையில் ஒரு குழு திருப்பதி திருமலைக்கு வந்தது. சுவாமி தரிசனம் செய்த பின்னர்,திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் சீரடி சாய்பாபா கோயில் குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், இந்த கரோனா சமயத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் எவ்வாறு தரிசன முறையை பின்பற்றுகின்றனர். பாதுகாப்பு, போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியதும் விரைவில் சீரடி சாய்பாபா கோயிலில் பாபாவை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், அக்கோயிலில் திருப்பதி தேவஸ்தான வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க உள்ளதாக சீரடி கோயில் அதிகாரிகள் கூறினர்.
பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி பேசும்போது, “உலகில் உள்ளஇந்து கோயில்களில் மிக முக்கியமான கோயிலான திருமலை திருப்பதி தேவஸ்தானம், மீதமுள்ளமுக்கிய இந்து கோயில் இணையதளங்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளும்.
போலி இணைய தளங்கள் மூலம் பக்தர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தரிசனம், தங்கும்அறைகள், பிரசாதம் போன்றவற்றை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியைஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
உண்டியல் வருவாயை அதிகம்வட்டி தரும் அரசு வங்கிகளில்டெபாசிட் செய்வது குறித்தும்சீரடி சமஸ்தானம் விளக்கம் கேட்டது. மேலும், ஆந்திர முதல்வரின்ஆலோசனைப்படி விரைவில் ‘கோயிலுக்கோர் கோமாதா’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தேவஸ்தானம் சார்பில் இத்திட்டத்தை முதலில் தமிழகத்தில்தான் தொடங்க உள்ளோம். ஒவ்வொரு முக்கிய இந்து கோயிலுக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு பசு வழங்கப்படும். இத்திட்டத்தை சீரடி சாய்பாபா சமஸ்தானமும் விரைவில் தொடங்க திட்டமிட் டுள்ளது” என்றார்.
தேருக்கு பதில் சர்வ பூபால வாகனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலை தேரோட்டத்துக்குப் பதில், சர்வ பூபால வாகன சேவை நடந்தது. ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்டு சர்வ பூபால வாகனத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இரவு அஸ்வ வாகனத்தில் (குதிரை) மலையப்பர் காட்சியளித்தார். இன்று பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளாகும். காலை சக்கர ஸ்நானமும், இரவு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.