

மைசூருவில் சுற்றுலா துறை மேம்படுத்துவதற்காக அந்த தொகுதியின் எம்.பி. பிரதாப் சிம்ஹா 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிக உயரத்தில் இருந்து குதித்த முதல் இந்திய எம்.பி. என்ற பெருமையை பிரதாப் சிம்ஹா பெற்றுள்ளார்.
மைசூருவை சேர்ந்த 'சூ காகினி என்கிற தனியார் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வானில் குதித்து சாகசம் செய்யும் 'ஸ்கை டைவிங்' நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காகவும், மைசூருவில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காகவும் முன்னாள் பத்திரிகையாளரும், மைசூரு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான பிரதாப் சிம்ஹா (38) வானில் இருந்து குதிக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த மூன்று மாதங்களாக வானில் பறப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மைசூரு விமான நிலையத்தில் நேற்று காலை 8.45 மணிக்கு சிறிய ரக விமானத்தில் பிரதாப் சிம்ஹா தனது அமெரிக்க பயிற்சியாளருடன் 13 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து குதித்து சுமார் 15 நிமிடங்கள் வானில் பறந்து தரையிறங்கினார்.
இது தொடர்பாக பிரதாப் சிம்ஹா கூறுகையில், '' 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வானில் குதிக்கும் போது முதலில் மிகவும் பயமாக இருந்தது. வானில் பறக்க தொடங்கிய அடுத்தடுத்த நிமிடங்களில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பேரனுபவமாக மாறியது.
வானில் இருந்து 220 கிமீ வேகத்தில் பறந்து பூமியை நோக்கி வந்தடைந்தேன். உச்சி வானில் உற்சாகமாக பறந்த ஒவ்வொரு நிமிடமும் படபடப்பும், பரவசமும் கலந்து இருந்தது. இவ்வளவு உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை''என்றார்.