Published : 27 Sep 2020 06:55 AM
Last Updated : 27 Sep 2020 06:55 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலத்துடன் ரூ.100 உதவி: கேரள மக்களின் மனதை வென்ற பெண்

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் கும்பலாங்கி பகுதியைச் சேர்ந்தவர் மேரி செபாஸ்டியன். இவரது பகுதிக்கு அருகிலுள்ள செல்லானம் கடற்கரைப் பகுதியில் அண்மையில் கடலரிப்பு ஏற்பட்டதாலும், மழை வெள்ளத்தாலும் பலர் பாதிக்கப்பட்டனர்.

அந்தப் பகுதிக்குச் சென்ற மேரி செபாஸ்டியன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். மேலும் அந்தப் பொட்டலத்தில் ரூ.100 பிளாஸ்டிக் உறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தெரியாத வகையில் உணவுப் பொட்டலத்தின் உள்ளே இது வைக்கப்பட்டு இருந்தது. இது பலருக்கும் உதவியாக இருந்தது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மேரி செபாஸ்டியன் கூறியதாவது:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினேன். அப்போது அந்தப் பகுதியில் மழைப் பொழிவுடன் குளிரும் அதிகமாக இருந்தது. இதனால் அந்தப் பொட்டலத்தில் ரூ.100 வைத்துக் கொடுத்தேன். இதன்மூலம் அந்தப் பணத்தில் அவர்கள் தேநீர் போன்ற சூடான பொருட்களை வாங்கி சாப்பிட முடியும் என்று எண்ணினேன்.

குளிர் காலத்தில் நான் தேநீர் குடிப்பேன். அதை வைத்துதான் நான் பணம் தர எண்ணினேன். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று நான் விரும்பினேன். ஆனால் எல்லோருக்கும் அது தெரிந்துவிட்டது. தற்போது என்னை பலரும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு மேரி கூறினார்.

உணவுப் பொட்டலங்கள் வழங்கும் போது பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த உள்ளூர் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது மூத்த அதிகாரிக்கு பணம் இருக்கும் தகவலைத் தெரிவித்தார். பின்னர் அதை பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக அந்த போலீஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேரள மக்களின் மனதை வென்ற மேரி செபாஸ்டியன், சமையல் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 நாட்களாக சமையல் தொழில் செய்து கிடைத்த பணத்தைதான் அவர் உணவுப் பொட்டலத்தில் வைத்து அனைவருக்கும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x