Last Updated : 26 Sep, 2020 04:17 PM

 

Published : 26 Sep 2020 04:17 PM
Last Updated : 26 Sep 2020 04:17 PM

சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

2020, பிப்.8ம் தேதி மோடியை ராஜபக்ச சந்தித்த போது எடுத்த படம்.

புதுடெல்லி

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது.

பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள், வாணிபம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் இருதரப்பினரும் பேசினர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் கூறும்போது, “இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்” என்றார்.

இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனான பவுதத உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டாலர்கள் உதவி அறிவித்தார்.

பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்தியா-இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல் வாய்ப்பு அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கவுரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்” என்று கூறியதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x