Last Updated : 26 Sep, 2020 04:04 PM

 

Published : 26 Sep 2020 04:04 PM
Last Updated : 26 Sep 2020 04:04 PM

10 மாநிலங்களில் இருந்து 75% புதிய தொற்றுகள்; 7 கோடியைத் தாண்டிய கரோனா பரிசோதனைகள்: மத்திய அரசு

75 சதவீத புதிய கரோனா தொற்றுகள் 10 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளதாவது:

''இந்தியாவில் தற்போது ஒருநாளில் 85,362 புதிய கரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 75 சதவீத நோயாளிகள் 10 மாநிலங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மகாராஷ்டிரா தினந்தோறும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளோடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிற்து. கர்நாடகாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளும் ஆந்திராவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளும் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரு நாளில் ஏற்பட்ட 1,089 இறப்புகளில் 83 சதவீத உயிரிழப்பு, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏற்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 416 இறப்புகள் பதிவாகி உள்ளன. கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முறையே 86 மற்றும் 84 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியா தன்னுடைய பரிசோதனைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 1,086 அரசு ஆய்வகங்கள் 737 தனியார் பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 1,823 ஆய்வகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் 14 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் இதுவரை 7,02,69,975 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 85,362 புதிய கரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல இதுவரை 93,379 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்''.

இவ்வாறு மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x