

சானிட்டரி நாப்கின்கள் குறித்த காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடனின் முன்னெடுப்பில், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கைகோத்துள்ளது அரசியல் உலகில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன். இவர் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் உருவாக்கும் இயந்திரத்தையும் நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரத்தையும் அமைத்துக் கொடுத்து வருகிறார். 2013-ல் அவர் எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் இருந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி எர்ணாகுளத்தில் 25 அரசுப் பள்ளிகளில் தொடங்கிய திட்டம் தற்போது 150 பள்ளிகளுக்கு விரிவடைந்துள்ளது.
இத்திட்டத்துக்கு 'பிரேக்கிங் பேரியர்ஸ்' என்று ஹிபி ஈடன் பெயரிட்டுள்ளார். இத்திட்டத்தின்படி, பெண்களிடமும் விடலைப்பருவச் சிறுமிகளிடமும் மாதவிடாய் காலச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்படும் என்று ஹிபி தெரிவித்துள்ளார்.
பிரேக்கிங் பேரியர்ஸ் செயல் திட்டத்துக்கான சின்னத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் பொக்ரியால், இணைய வழியில் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் முன்னெடுப்பில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கைகோத்தது அரசியல் உலகில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.