மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25 ஆயிரம்; பட்டதாரியானால் ரூ.50 ஆயிரம்: பிஹார் முதல்வர் தேர்தல் வாக்குறுதி

மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25 ஆயிரம்; பட்டதாரியானால் ரூ.50 ஆயிரம்: பிஹார் முதல்வர் தேர்தல் வாக்குறுதி
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25 ஆயிரமும் கல்லூரிப் படிப்பை முடித்தால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 28-ம் தேதி, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தனது 7 அம்சத் தேர்தல் அறிக்கையை விளக்கினார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

7 தேர்தல் வாக்குறுதிகள்

''* பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.25,000 வழங்கப்படும். பட்டப் படிப்பை முடிக்கும்பட்சத்தில் ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும்.

* மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

* அனைத்துக் குடிமக்களுக்கும் அரசு வேலை அளிப்பது சாத்தியமில்லை என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் வேலைவாய்ப்புத் திறன் மையங்கள் அமைக்கப்ப்டும்.

* அனைத்துக் கிராமங்களிலும் சோலார் தெரு விளக்குகள் அமைத்துத் தரப்படும். கிராமப் புறங்களில் கழிவு மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

* அனைத்து மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் புயல் நீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும்.

* முதியவர்களுக்குக் காப்பகங்களும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளும் அமைத்துத் தரப்படும்.

* அதேபோல கிராமப் பகுதிகளில் அதிக அளவில் சுகாதார வசதிகளும் மயானங்களும் கட்டப்படும்''.

இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in