Last Updated : 25 Sep, 2020 07:49 PM

 

Published : 25 Sep 2020 07:49 PM
Last Updated : 25 Sep 2020 07:49 PM

64 ஆண்டுகால இந்திய மருத்துவக் கவுன்சில் இன்றுடன் கலைப்பு: உதயமானது தேசிய மருத்துவ ஆணையம்

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

64 ஆண்டுகளாக இருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) இன்றுடன் கலைக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நடைமுறைக்கு வந்தது.

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்தி வந்த இந்திய மருத்துவக் கவுன்சிலும், இயக்குநர் குழுவும் செப்டம்பர் 25-ம் தேதியுடன் கலைக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவத் துறையில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி 64 ஆண்டுகளாக செயல்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இருப்பினும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் இன்று நடைமுறைக்கு வந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் முன்னாள் இயக்குநர், மருத்துவர் சுரேஷ் சந்திர சர்மா தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மருத்துவக் கல்வியில் மத்திய அரசால் செய்யப்பட்ட வரலாற்றுச் சீர்திருத்தங்களால், 4 சுயாட்சி வாரியங்களுடன், தேசிய மருத்துவ ஆணையம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் இன்று கலைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சீர்திருத்தங்களால், மருத்துவக் கல்வி என்பது வெளிப்படைத்தன்மை நிறைந்ததாக, தரமாக, நம்பகத்தன்மை உடையதாக இருக்கும்.

இதன்படி, என்எம்சி சட்டப்படி, இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம், முதுநிலை மருத்துவக் கல்வி வாரியம், மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவாரியம், மருத்துவக் கல்வி பதிவு வாரியம் ஆகிய 4 சுயாட்சி வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த 1956, இந்திய மருத்துவக் கல்விச் சட்டத்துக்குப் பதிலாக 2019, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2020, செப்டம்பர் 25-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் குழுவும் கலைக்கப்பட்டது. என்எம்சியில் தலைவரும், 10 நிர்வாக உறுப்பினர்களும், 22 பகுதி நேர உறுப்பினர்களும் இருப்பார்கள்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணயத் தேர்வாகவும் இது நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x