

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை. இந்த கறுப்புச் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது, குறைந்தபட்ச ஆதார விலையை அழித்துவிடும், கார்ப்பரேட்டுகளிடம் அடிமைகளாக்கிவிடும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மசோதா, விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என்று மத்திய அரசு கூறி வருகிறது
காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் சந்தித்தனர். வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளி்க்கக்கூடாது, அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே எண்ணங்களைக் கொண்ட 18 எதிர்க்கட்சிகள் சேர்ந்து குடியரசுத் தலைவர் வேளாண் மசோதாக்களுக்கு கையொப்பம் இடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். இந்த மசோதா சட்டமாகினால், கூட்டாட்சி அமைப்புக்கே விரோதமானதாக மாறிவிடும் எனத் தெரிவித்தோம்.
ஒருவேளை குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தால், அவர் கையப்பமிடமாட்டார் என நம்புகிறேன். அவ்வாறுசட்டமாகினால், உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமனறம் வரை நாங்கள் அந்த சட்டங்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவோம்.
நிச்சயமாக நீதிமன்றத்தால்அந்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மத்திய அரசு செய்துள்ளது அரசியலமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பட்டியலி்ல 2-வது பிரிவு என்பது மாநிலங்களின் முழுமையான உரிமையைக் குறிக்கிறது. அதன்படி, வேளாண்மை 2-வது பிரிவில் இருக்கிறது. இந்த சட்டம் நேரடியாக, மாநிலங்களுக்குள் நடக்கும் வேளாண் வர்த்தகம், வியாபாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. சந்தைகள் நடத்துவது, பராமரிப்பது என்பது மாநில அரசின் கீழ் வரும்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கருத்துக்களைக் கேட்காமல், புறக்கணித்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை குரல்வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இவை கறுப்புச் சட்டங்கள். மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம், நாடாளுமன்றபாரம்பரியத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும், விதமுறைகளுக்கும் விரோதமானது.
அவையில் ஒரு உறுப்பினர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி மனு அளித்தால்கூட, அதை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும். ஆனால், அது அங்கு நடக்கவில்லை.
மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றபோது என்ன நடந்திருந்தாலும் அது அரசியலமைப்புச்சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கையில் ஆதரவு அரசுக்கு இல்லாத போது, எவ்வாறு வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற முடியும்.
துணைத் தலைவர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும், தவறாக மாநிலங்களவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.